Monday, December 1, 2014

சர்க்கரை சுவை

"பால் சிரிப்பால்-ஒளி
            பூத் தெளிப்பாள்"

அன்புள்ள(?) கெளசல்யாவிற்கு,
    
      முந்தய நாளுக்கு முன் நாள் முழுதும் எனக்குள் உர்ர்ர்ர்ர்ர்ன்று இருந்த இதுதானா இன்றும் எனக்குள் இருக்கிறது என்று சந்தேக படும்படியாய் படு உற்சாகமாய் இருக்கிறது மனது. காரணம் நீயென்று சுலபமாய் சொல்லிவிட முடியாதெனினும், நீ மிக முக்கிய காரணம். உன்னை ஒருமையில் அழைப்பதற்கு என்னை மன்னித்துவிடுவாயென்றே நம்புகிறேன். நேற்று சில நொடிகள் மட்டுமே தனிப்பட்ட விஷயத்தை பேசியிருந்ந்தாலும், எனக்கு மிக நெருக்கமானவள் நீ. மிக உயர கோபுரத்தில் முதல்முறையாய் நிற்க வாய்ப்பு கிடைத்தவனின் உலகை பார்க்கும் அகல கண்கள் வாய்த்துவிடுகிறது எனக்கு உன்னை பார்க்கும் நொடிகளணைத்தும். உன்னை திரும்ப என் வாழ்வில் பார்க்க முடியாவிட்டாலும், இத்தனை நாட்களாய் உன்னை காண கிடைத்ததற்காய் உனக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் (தஸ்தாவஸ்கியைப் போல்).
எந்தவித ஒழுங்குமின்றி இப்படியாய் இதை எழுதுவதற்கு மன்னித்துவிடு. மனதும் இப்படியாய் எவ்வித ஒழுங்குமின்றி உன்னைப் பற்றிய ஞாபங்களால் நிறைந்திருக்கிறது.
உன்மீதுள்ள அன்பை காதலென்று தவறாய் புரிந்துக் கொள்ள வேண்டாம். அன்பும் காதலும் வேறுவேறு இல்லைதானெனினும், இங்கு அது வேறுவேறாகதான் புரிந்து கொள்ளபடுகிறது. உன்மீதான எனது காதலென்பது பெரும் நீருக்கு மத்தியில் கூட்டமாயிருக்கும் பெயரறியா அரிய பறவைகளை ரசிப்பது போன்றதாகும். ஒரு நாள் நானுன்னை கூப்பிட்டு ஏதோ கேட்க, திடுகிட்ட நீ மெளனமாய் சிரித்துக்கொன்டே பதிலளிக்க, பயத்துடன் (zip போட மறந்துட்டோமா?) மலங்க மலங்க விழித்து "எதுக்கு சிரிக்கிறீங்க?" னு உன்னிடமே நான் கேட்ட நிகழ்வு ஞாபகமிருக்கிறதா உனக்கு? நீ எப்போது என் அலைபேசிக்கு அழைப்பாயென்று காத்துக்கொண்டிருக்கிறேன். சீக்கிரமாய் பேசிவிடு. அதுவரை நீ அன்று வாயிலிருப்பதாய் சுட்டிக்காட்டிய திசையில் திரளாயிருந்த சர்க்கரையாய், உன் நாவில் ஊறியிருந்த சுவையாய்  என் மனம் முழுதும் 'நீயும்' 'நீ' சார்ந்த நினைவுகளுமாய் நிறைந்திருக்கும்.

இப்படியாய் உன் ஞாபக அடுக்குகளில் உன்னோடிருக்கும்,
ரதியழகன்.